siruppiddy

திங்கள், 26 மே, 2014

விக்கியின் தீர்மானம் தொடர்பில் பீரிஸ் கவலை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பினை வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நிராகரித்தமை மிகப் பெரிய தவறாகம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் புது டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளுமாறு, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.எனினும், இந்த அழைப்பினை வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிராகரித்திருந்தார்.
நல்லெண்ண அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டமை மிகப் பெரியத் தவறாகவே கருதப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பாராளுன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷெனுகா செனவிரட்ன, யாழ்ப்பாண மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் இந்திய பிரதமர் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

வியாழன், 22 மே, 2014

யுத்தத்தின்போது 18500 இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்::


இலங்கையில் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் 18,500 இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, நேற்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆரம்பித்துள்ளது.
இதன்போதே 13.590 பொதுமக்கள் மற்றும் 5000 பாதுகாப்பு படையினர் காணாமல்போயுள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவிக்கையில்,
ஆணைக்குழு எப்போதும் சுதந்திரமாக மற்றும் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது.
http://www.pcicmp.lk/ என்ற இந்த இணையத்தளத்தில் மூன்று மொழிகளில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், முறைப்பாடுகளையும் இணையத்தளத்தின் மூலம் பதிவு செய்ய முடியும். அதற்கான படிவங்கள் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
 
 
.

வியாழன், 8 மே, 2014

தமிழர் அமைப்புக்கள் கனடாவில் ஒன்றுபட்டு முன்னெடுக்கும் -18 துக்க நாள்


முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை, கனடாவில் தமிழர் அமைப்புக்கள் பலவும் ஒன்றாக முன்னெடுக்கவுள்ளன.
இதனை கடந்த மே-6ம் நாள் செவ்வாய்கிழமை ரொறன்ரேவில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
கனடாவின் ரொறன்ரோ, ஒட்டோவா, மொன்றியல், எட்மண்டன் ஆகிய பிரதான பெருநகரங்களில் தமிழீழத் தேசியத் துக்க நாள் நிகழ்வுகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு அமைப்பினையும் முதன்மைப்படுதாமல் , பொதுமக்கள்  நிகழ்வாக மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை முன்னெடுக்க இருப்பதாக, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு வின் மகாலிங்கம் அவர்கள் உத்தியோகபூர்வ அறிக்கையினை வாசித்து அகவணக்கத்துடன் ஊடக சந்திப்பினை தொடங்கி வைத்திருந்தார்.
பொதுமக்களின் நேர வசதியினைக் கருத்திற்கொண்டு, மே-18 காலை 11மணி முதல் மாலை 5 மணி வரை நினைவேந்தல் வணக்கத்தினைMarkham and Milner சந்திப்பில் அமைந்துள்ள, St peter and Paul உள்ளக மண்டபத்தில் ஓருங்கு செய்துள்ளதாக ஊடக அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் உரைகள் ,சர்வமதப் பிரார்தனைகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் யாவும் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கொத்துக் கொத்தான படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமிப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும்,  ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாகவே கருதப்படுகின்றது.
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர் திரு சு.இராசரத்தினம், தமிழ் படைப்பாளிகள்  கழகத் தலைவர் திரு வேலுப்பிள்ளை தங்கவேலு, கனடியத் தமிழர் பேரவைப் பொருளாளர் வைத்தியக் கலாநிதி சாந்தகுமார், கனடாத் தமிழர் இணையத்தின் தலைவர் திரு நாதன் வீரவாகு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்  திரு. நிமால் விநாயகமூர்த்தி  ஆகியோர் இக்கூட்டு முன்னெடுப்பு குறித்து கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
தொடர்ந்து ஊடகங்கத்துறையினரது  கேள்விகளுக்கு வழங்கிய பதில்களின் முக்கிய தொகுப்பு :
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், பலமாக எதிர்கொள்ள ஒவ்வொரு அமைப்புக்களும் புரிந்துணர்வோடு ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறு ஒன்றுபடுவதற்கான பொதுப்புள்ளியாகவும் பொதுமக்கள் நிகழ்வாகவும் மே-18 வணக்க நாள் இருக்கின்றது.
தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசுகளது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்பது பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே தொடங்கி, கடந்த 2009ம் ஆண்டில் உச்சம் தொட்டு, இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.  இனஅழிப்புக்கு பரிகார நீதியினை வேண்டி எமது விடுதலை அடைவதற்கே அனைவரு நோக்கமாக இருக்கின்றது.
சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கொத்துக் கொத்தான படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமிப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும்,  ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாகவே கருதப்படுகின்றது.
ஈழத்தமிழ் தளத்தினை மையமாக கொண்டு இயங்குகின்ற ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக அத்தியாவசியமானவை.மக்களுக்கான இந்த பொதுநிகழ்வில் அனைத்து மக்களும் பங்குபற்றிப் பயன்பெறச் செய்ய ஊடகங்களால் மட்டுமே  முடியும்.அதைச் செய்ய வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு ஊடகவியலாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு வழங்கப்பட்ட பதில்களின் கருத்து அமைந்திருந்தது.

வெள்ளி, 2 மே, 2014

ஊடக சுதந்திரம் இலங்கையில் இல்லை! அச்சுறுத்தல் :

உலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை கீழ் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் ஊடகங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் தமது பணிகள் காரணமாக உலகம் முழுவதும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதேபோல் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கடினமான பின்னணியில் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன.

2000 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதுடன், அதற்கான நீதி வேண்டி அவர்களின் குடும்பங்கள் இன்னும் காத்துள்ளனர் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்தார்.

கடந்த கால குற்றச் செயல்கள் குறித்து விசாரணைகளை நடத்தி, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் உறுதியான கடப்பாட்டை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.

நாம் பரந்த உலக மாற்றத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். செழுமை மற்றும் மனித உரிமைகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறான ஜனநாயக சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, கருத்துச் சுதந்திரம், கலாசார தொடர்பில் சமூகத்தின் ஊடான மாற்றங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த ஜனநாயக மதிப்புகள் தொடர்பில் எமது பங்காளர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என பிரித்தானியா நம்புகிறது.

உலக ஊடக சுதந்திர தினத்தில் கருத்துச் சுதந்திரத்தை பின்பற்றுவதில் நாம் தமது உறுதிப்பாட்டை புதுப்பிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

www.nilavarai.com