siruppiddy

சனி, 19 அக்டோபர், 2013

நிமலராஜன் மறைந்து 13 வருடங்கள் நிறைவு

 
நிமலராஜன் கொலை செய்யப்பட்டு, 13 வருடங்கள் கடந்துள்ளது. 2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர்.

அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுதிக் கொண்டிருந்தார்.1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் அடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில் பணியாற்றி, அவரது தந்தை இடதுசாரி கொள்கைளைக் கொண்ட தொழிற்சங்கவாதியாவார்.

கொழும்பில் குடியிருந்த நிமலராஜன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு இரண்டு வாரங்கள் அகதி முகாம்களில் இருந்த பின்னரே யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். 1983ம் ஆண்டு ஜூலை இனவாதத் தாக்குதலில் உயிர் தப்பிய தமிழர்கள் பலர் வடக்கு கிழக்கிற்கு அனுப்பப்பட்டனர். சில வருடங்கள் சென்ற பின்னர் நிமலராஜன் வடபகுதி தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை ஊடகவியலாளர் என்ற வகையில் எடுத்துரைத்தார்.

குறைந்த வசதிகளுடன் கடினமான சூழலில் அவர் இந்தப் பணியை மேற்கொண்டார். பி.பி.சி தமிழோசை, வீரகேசரி ஆகிய தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியிலும் பி.பி.சி சந்தேஷய, ஹிரு எவ்.எம் மற்றும் ராவய ஊடகங்களில் சிங்கள மொழியிலும் உயிரிழக்கும் வரை தொடர்ந்தும் தகவல்களை மிகவும் அக்கறையோடு வெளியிட்டு வந்தார்.

இதுதொடர்பாக ஊடக நிறுவனங்களில் அப்போது பணியாற்றிய ஊடகவியலாளர்கள் சாட்சி கூறுவார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் சரியான தகவல்களை வழங்கும் ஊடகவியலாளராக பல கஸ்டங்களுக்கு மத்தியில் பணியாற்றியக் கூடிய இயலுமையின் காரணமாக நிமலராஜன் தென்பகுதி ஊடகவியலாளர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஊடகவியலாளராக இருந்தார். தலைநகரில் இருந்ததால் சிங்கள மொழியின் பரீச்சயமும் தனது தந்தையிடமிருந்து கிடைத்த இடதுசாரி கொள்கைகளும், அவருக்கு உதவியாக அமைந்தன. ஒருமுறை நிமலராஜன் ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக பாரதூரமான நெருக்கடியை எதிர்நோக்கினார்.

அப்போது யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வன்முறை மற்றும் அடக்குமுறைச் சூழல் காரணமாக ஊடக அடையாள அட்டையை வைத்திருப்பது மிக முக்கியமாக இருந்தது. இதன்மூலம் ஓரளவு தடையின்றி தகவல்களைத் தேடிக்கொள்ள முடியுமென்ற நிலைப்பாட்டில் நிமலராஜன் இருந்தார். அவருக்குப் பல சிங்கள நண்பர்கள் இருந்தனர். ராவய பத்திரிகை நிறுவனத்தின் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார். எனினும் அது கிடைக்கவில்லை.

ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன், நிமலராஜன் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுவதால் ராவய பத்திரிகையின் மூலம் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முடியாது எனக் கூறியிருந்தார். ஏ.பி.சி நிறுவனத்தின் தலைவர்களும் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவில்லை. அப்போது பிரதேச ரீதியாக செயல்படும்

ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்க ஊடக நிறுவனங்கள் போதிய அக்கறைக் காட்டவில்லை.
இறுதியில் நிமலராஜன் அரைய பத்திரிகையின் ஊடாக ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார். எனினும் அவரது செய்தியின் தேவை ஊடகங்களுக்கு இருந்தது. அதற்காக நிமலராஜனை அனைத்து ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டன.
வடபகுதி மக்கள் தொடர்பாகவும் அங்கு இடம்பெற்ற, இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான விடயங்களில் நிமலராஜன் முக்கிய இடத்தை வகித்தார். தனக்குத் தெரிந்த சகல தகவல்களையும் மறைக்காது வெளியிடுவது அவரது இயல்பாக இருந்தது. இதற்காக பணம் கிடைத்ததா கிடைக்கவில்லை என அவர் கருத்திற்கொள்ளவில்லை. அவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டார். அதை அவர் தனது கடமையாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

எப்படியான சிரமங்களுக்கு மத்தியிலும் செய்தி அளிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் பல உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் அவருக்கு குறைந்தபட்ச கொடுப்பனவுகளையே வழங்கியது. ஒரு செய்திக்காக 50 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டது. 24 மணி நேரம் செயல்படும் அந்த நிறுவனத்தின் ஐந்து வானொலிகள் மணிக்கொரு தடவை செய்திச் சுருக்கங்களை ஒலிபரப்பி வருகிறது.

பிரதான செய்திகளுக்கு புறம்பாக இந்தச் செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. அனைத்து செய்தி அறிக்கைகளிலும் நிமலராஜனின் செய்திகள் பயன்படுத்தப்பட்டன. தொலைநகல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது குரல் ரீதியாகவும் வழங்கிய அனைத்துச் செய்திகளும் ஒரே அளவிலான ஊதியமே வழங்கப்பட்டது.

இதுசம்பந்தமாக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகளிடம் சில கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், நிமலராஜன் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர் தமது நிறுவனங்களின் ஊடகவியலாளர் எனக் கூறி புகழைத்தேடும் தேவை அவர்களுக்கு இருந்தது. நிமலராஜனின் இறுதிக் கிரியைகளுக்காக ஏ.பீ.சி நிறுவன அதிகாரிகள் நிதியுதவிகளை வழங்க முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்தது. இதன்மூலம் அவர்கள் தமது ஊடக நிறுவனத்திற்குப் புகழை ஈட்டிக்கொள்ள முயற்சித்தனர்.

நிமலராஜன் ஊடகவியலாளர் என்ற வகையில் பி.பி.சி சந்தேஸய மூலமே சிங்கள மக்கள் மத்தியில் பரீட்சையமானார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காணாமல் போதல், கொலைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட துன்ப துயரங்கள், அனைத்தையுமே அவரது குரலில் சிங்கள மக்கள் கேட்டனர்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்திற்கு

கொண்டுசென்றவர் நிமலராஜன்தான். அதில் முக்கியமான நபரும் அவர் தான். செம்மணி படுகொலை தொடர்பான முழுமையான அறிக்கையை நிமலராஜன் ஊடகங்களில் வெளியிட்டார். 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஊர்காவல்துறை தீவகப் பகுதிகளில் இடம்பெற்ற வாக்கு மோசடிகள் தொடர்பாக அவர் முழுமையான செய்தியை வழங்கியிருந்தார்.
இந்தச் செய்தி வெளியிடப்பட்டு சில தினங்களுக்குப் பின்னர் அவருக்கு

அடிக்கடி மர்ம அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. அதிலொரு அழைப்பிற்கு நிமலராஜனின் மனைவி பதிலளித்திருந்தார். நீங்கள் வெள்ளை ஆடை உடுத்த தயாராக இருங்கள் என அந்தத் தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அச்சுறுத்தல்கள் ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. நான் அஞ்சப் போவதில்லை. செய்திகளை நான் தொடர்ந்தும் வழங்குவேன் என நிமராஜன் கூறியிருந்தார்.

தனக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக நிமராஜன் தனது ஊடக நண்பர்களிடம் கூறியிருந்தார். சில தினங்கள் கடந்தன. நிமலராஜன் அவரது வீட்டுக்குள் வைத்தே கொலை செய்யப்பட்டார். அவரது வீடு யாழ்ப்பாணத்தின் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்திருந்தது.

நிமலராஜனின் கொலையானது தேசிய ரீதியில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் பாரிய அதிருப்திக்கு காரணமாக அமைந்தது. இந்தக் கொலை தொடர்பாக நேரடியாக அரசாங்கம் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தின்

பிரதான கூட்டணிக் கட்சியாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி செயல்பட்டது. டக்ளஸ் தேவானந்தா அந்த அரசாங்கத்தின் புனர்வாழ்வு தொடர்பான அமைச்சரவை அந்தந்துள்ள அமைச்சராகப் பணியாற்றினார்.
இந்தக் கொலையுடன் ஈ.பி.டி.பி சம்பந்தப்பட்டுள்ளதாக முதலாவது ஊடக அறிக்கையைத் தமிழர் விடுதலைக் கூட்டணியே வெளியிட்டது. அப்போது அந்தக் கூட்டணியின் தலைவராக ஆனந்தசங்கரி செயல்பட்டுவந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஈ.பி.டி.பியினர் நிமலராஜனை விடுதலைப் புலி உறுப்பினர் எனக் குறிப்பிட்டனர். விடுதலைப் புலிகள் அவரைக் கொன்றிருக்கலாம் என ஈ.பி.டி.பி.யினர் குற்றஞ்சுமத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கமும் நிமலராஜன் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.

மக்களைப் புனர்வாழ்வளிக்க முயற்சிக்கின்றவர்கள் மக்களைக் கொலை செய்துவருவதாகக் கூறி அவர்களும் கொலைக் குற்றத்தை ஈ.பி.டி.பி யினர் மீது சுமத்தினர். சுதந்திர ஊடக அமைப்பும் நிமலராஜனின் கொலைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. கொலை இடம்பெற்று சில வாரங்களுக்குப் பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிமலராஜனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நிமலராஜனின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன. எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கான குழு போன்ற பல சர்வதேச அமைப்புகள் இந்தக் கொலை குறித்து கவனம் செலுத்தின.
2000ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகள் இந்தக் கொலைக்கு காரணமாக இருப்பதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட எதிர்ப்பு காரணமாக பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், நிமலராஜன் கொலை சந்தேக நபர்களைத் தேட ஆரம்பித்தது. இந்த விசாரணைகள் யாழ்ப்பாணக் காவல்துறை நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி ரஞ்சித் டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றன.

கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் அல்லது அந்த அமைப்பில் முன்னர் செயல்பட்டவர்களாக இருந்தனர். இதுகுறித்து ஊடகங்கள் வழியாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதங்களையும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

எனினும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்யத் தவறினர். புலனாய்வுப் பிரிவனரால் அந்த பிரதான சந்தேக நபரின் சாட்சியங்களைப் பதிவு செய்து கொள்ள முடியாது போனது.
ஈ.பி.டி.பியின் முக்கிய நபரான நெப்போலியன் என்ற செபஸ்டியன் பிள்ளை ரமேஸ் என்பவர் அரசாங்க அரசியல்வாதிகளின் பாதுகாப்பின் கீழ்

நாட்டிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றார். ஏனைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதன்பின்னர், ஊடகத்துடன் தொடர்புடைய சில ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் அலுவலகம் பல சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தப் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் கானமயில்நாதனை பல தடவைகள் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

வலம்புரி பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளரான ராமச்சந்திரன் காணாமல் போனதுடன் இதுவரை அவர் தொடர்பான எந்தத் தகவல்களும் இல்லை. ராமச்சந்திரன் வலம்புரி பத்திரிகையின் சாவகச்சேரி செய்தியாளராக பணியாற்றினர்.யாழ்ப்பாண ஊடங்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டதுடன், அச்சு காதிதங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறான பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது உயிரரை துச்சமென மதித்து, யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை செய்தனர்.

பல ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது, பலர் தமது ஊடக நடவடிக்கைகளில் அமைதியான போதிலும், உதயன் பத்திரிகையின் ஆசிரியர் உள்ளிட்ட சிலர் தமது கடமைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தனர். இந்த நிலைமையில் நிமலராஜனின் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்றனர்.

நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திடம் நியாயமான விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தொடர்பில் ராஜபக்ஸ அரசாங்கத்தின் முரண்பாடு காணப்பட்டாலும் அவர்கள் சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவைகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருகின்றனர். நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் தற்போதை மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினதும் முக்கிய கூட்டணியாளர்களாக உள்ளனர் என்பதே இதற்கான காரணமாகும்.

நிமலராஜனின் கொலை தாம் செய்யவில்லை என ஈ.பி.டி.பியினர் நிராகரித்த போதிலும், உரிய விசாரணைகளை நடத்த இதுவரை அவர்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்க முடியாது. காரணம் யாழ்ப்பாணத்தில் ஏனைய விடயங்கள் மாத்திரமல்ல ஊடகங்களும் அரசாங்கத்தின் கட்டளையின் கீழேயே செயற்படுகின்றன.

நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு,13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது ஊடக நண்பர்கள் அதனை நினைவுக் கூறுவதும் கஸ்டமான நிலைமையாக மாறியுள்ளது. அவ்வாறு அவர்கள் நிமலராஜனை நினைவு கூர்ந்தாலும் அவரை கொன்றவர்களுடன் இணைந்தே நினைவு கூற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com