மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளது.
வடமாகாண சபையின் கன்னி அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் இது குறித்து அவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு வாரத்திலும் வியாழக்கிழமைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழமை.
இதில் மாத இறுதி அமர்வில் மாத்திரமே மாகாண முதல்வர்கள் கலந்துகொள்வார்கள்.
மாகாண அபிவிருத்தித் திட்டப் பொறிமுறைகள், மாகாண விடயதானங்கள் குறித்தான சட்டமூலங்கள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என்பதுடன் முதல்வர்களின் ஆலோசனைகளும் பெறப்படும்.
குறிப்பாக இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில் எட்டு மாகாண சபைகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
எனவே, அரசின் திட்டங்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டையே முதலமைச்சர்கள் எடுப்பார்கள்.
எனினும், ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியின் கீழ் இம்முறையே
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சரொருவர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உதயமாகியுள்ளது.
மாகாண சபை சம்பந்தமான பிரேரணைகள் அமைச்சரவையின் அனுமதிக்காக வரும்போது, அது மாகாண நிர்வாகத்துக்கு பாதகமாக இருந்தால் அதற்கு எதிராக முதல்வரால் கருத்து வெளியிடமுடியும்.
அத்துடன், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளு மாறும் அவரால் கோரிக்கை விடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக