siruppiddy

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

மக்களை ஏமாற்றிவிட்டு அடிபணிவுக்குத் தயாராகும் கூட்டமைப்பு -


வடக்கு மாகாணசபை தமிழர்களுக்கு வரமா? சாபமா? என்ற எண்ணத்தைத் தேர்தல் வெற்றியின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் மனங்களில் ஏற்படுத்தியிருக்கின்றது. வேட்பாளர் தெரிவில், அமைச்சர் தெரிவில், சத்தியப் பிரமாணம் எடுத்தல் தொடர்பில் என நீண்ட உட் சண்டைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வாக்களித்த மக்களின் கனவுகளில் வாய்க்கரிசி இடவே கூட்டமைப்பு இப்போதும் சித்தமாய் இருக்கிறது.

ஆம், தமிழ் மக்கள் அனைவருடைய மனங்களையும் இப்போது உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விடையம், அறியாமலா அல்லது வேறு வழியின்றி மிகப் பெரிய பிழை ஒன்றை விட்டுவிட்டோமோ என்பதுதான். இது பிழையா அல்லது வரலாற்றில் அழிக்க முடியாத தவறொன்றை அனைத்து தமிழ் மக்களும் இணைந்து சொய்துவிட்டோமா என்றும் சிந்திக்கத் தோன்றுகின்றது.
தமிழ் மக்களுடைய மனக்குமுறலுக்கு காரணம் நடந்து முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை

வெற்றிபெறவைத்துவிட்டோமோ என்பது தான். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை உலகில் பல நாடுகளையும் ஒருங்கிணைத்து அவற்றின் திட்டத்துடன் மழுங்கடித்ததும், அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்த மனிதத்துவம் இல்லாத சிறீலங்கா அரசாங்கத்தினை சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மூலம் நீதிக்கு முன் நிறுத்தி சட்டப்படி தண்டணை பெற்றுக்

கொடுப்பதற்கு எமது கைகளைப் பலப்படுத்துங்கள் என்று தமது பிரதானமான வாசகமாகக் கூறி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது போர்க்குற்றவாளி மகிந்தவின் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்கப் போவதாக அறிவித்துள்ளது.

இதற்கு வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்று வடக்குமாகாணசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதும், தான் 7ம் திகதி திங்கட்கிழமை அலரி மாளிகையில் வடக்குமாகாண முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தினை சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் செய்து

கொள்ளவுள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசரும், வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
சிறீலங்கவின் சட்ட விதிகளின்படி மாகாண முதலமைச்சர் முதல் உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்டவர்கள் வரைக்கும்

சாதாரணமான சமாதான நீதவான்கள் முன்னிலையிலேயே தமது பதவிப் பிரமாணங்களைச் செய்து கொள்ளலாம். முன்னாள் பிரதம நீதியரசராக இருந்த முதலமைச்சருக்கு இது தெரியாத விடையமாக இருக்காது. ஆனாலும் அவர் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் தனது பதவிப் பிரணமானத்தினை செய்யவுள்ளது, சர்வதேச மட்டத்தில் தற்போது சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள அழுத்தத்தின் வலுவைக் குறைத்துக் கொள்வதற்கே.

மிக நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த வடக்கு மாகாணசபைத் தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது என்றால் அதற்கு காரணம் சர்வதேசத்தினால் சிறீலங்காவிற்கு கொடுக்கப்பட்ட அழுத்தமே. இந்த சர்வதேச அழுத்தம் சிறீலங்கா அரசு மீது பிரயோகிப்பதற்கு முழுக்காரணமும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த புனித மாவீரர்கள் மற்றும் உயிரிழந்த அப்பாவிப் பொது மக்களுடைய தியாகம் என்பதை யாரும் மறுக்கவும் மறந்துவிடவும் கூடாது.

அந்த தியாகங்களும் அவர்களுடைய வீரங்களும் காலகாலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும். எமது முன்னோர்கள் எவ்வாறு இருந்தார்கள், அவர்களுடைய இலட்சியவேட்கை என்ன என்பதை எதிர்காலத்திற்கு கொண்டுசெல்ல வேண்டிய கடப்பாட்டில் நாம் இப்போது இருக்கின்றோம். ஆனால் தமிழ் மக்களுடைய இருப்புக்கள், அடையாளங்கள், வரலாற்று பதிவிடங்கள் என்று எல்லவற்றையும் சிறீலங்கா அரசாங்கம் அடியோடு

அழித்து வருகின்றது. இச் செயற்பாடு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற பிற்பாடு அதிகரித்துக் காணப்படுகின்றது.
குறிப்பாக முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்ந்த நிலக்கீழ் வீடு

இடித்துத் தரமட்டமாக்கப்பட்டுள்ளது. அதுபோன்று விசுவமடுப் பகுதியில் இருந்த வீடும் அடையாளம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளது. முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியினைக் கொண்டாடிய பொது மக்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு மாகாணசபைத் தேர்தலின் ஆதரவு தெரிவித்த பொது மக்கள் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் கந்தசாமி ரவிச்சந்திரன் (வயது 47) என்பவர் சிறீலங்கா இராணுவத்தினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மேலும் கண்ணகிபுரத்தில் சபாரட்ணம் தயாபரன் என்பவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் அவரது ஒரு உழவு இயந்திரமும் தீவைத்து எரியூட்டப்பட்டுள்ளது. புதுமுறிப்பு கண்டாவளைப் பகுதியில் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி அமைப்பாளர் அசோக்குமார் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அனலைதீவு சென்ற வடக்குமாகாணசபை உறுப்பினர் கஜதீபனின் வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போன்று யாழ்.தீவகப் பகுதியில் குறிப்பாக ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியால் மக்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் தேர்தல் காலங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட மறுப்புத் தெரிவித்த அதிபர்கள், ஆசிரியர்கள் தற்போது சட்டத்திற்கு புறம்பான வகையில் இடமாற்றப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இவ்வாறான ஒரு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த பொது மக்கள் மற்றும் கட்சி ஆதவாளர்கள் கிடைக்கப் பெற்றுள்ள மாகாண சபையினுடாக நேரடியான நிதி உதவிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், முதல்வர் விக்கினேஸ்வரன் நினைப்பது போன்று இந்த நிதிகளை நேரடியாக கையாள முடியாது. மாகாண சபைக்கு வெளிநாட்டு முதலீடுகளையோ அல்லது வெளிநாட்டுக் கடன்களையோ நேரடியாக கையாளும் அதிகாரம் எதுவுமில்லை. அவ்வாறான நிலையில்

முதலமைச்சரின் கோரிக்கை எவ்வாறு நிறைவேற்றப்படும்? சிறீலங்காவுக்கு வரும் அனைத்து நிதியங்களும் திரைசேரினுடாகத்தான் வெளிப்பாச்சப்படும். அவ்வாறான நிலையில் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளே அதிகமாக இருக்கும் என்பதை ஐயா விக்கினேஸ்வரன் அறியவில்லையா?... அல்லது நடிப்பா?...
தமிழர்களின் இறையாண்மையைப் பெற்றுக் கொண்டால் அதனுடாக அனைத்தும் நிறைவேற்றப்படும் என்பதுதான் மக்களின் உறுதிப்பாடு. அதற்காகவே, மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள். வீதி புனரமைப்பையும், ஒரு சிலருக்கு தண்ணீர் இறைக்கும் பம்புகளையும் வழங்கிவிட்டு

அபிவிருத்தி செய்வதாக தெரிவித்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு மக்கள் கொடுத்த பாடத்தை, அடுத்துவரும் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சந்திக்க வேண்டிவரும் என்பதை கூட்டமைப்பிலுள்ள அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனவே, மக்கள் இன்று சலுகைக்காக இல்லை, உரிமைக்காகத்தான் வாக்களித்தா£ர்கள் என்பதை கூட்டமைப்பு அரசியல்வாதிகள் உணர்ந்து மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரினதும் வேண்டுகோளாகவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com