இயக்கத் தலைவர் திரு பழ நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை வெளியிட்டு வைப்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். திரு பழ நெடுமாறன் அவர்கள் அரும்
பாடுபட்டு தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். இந்த நூல் தவைவர் பிரபாகரனின் முழு வாழ்க்கை வரலாறு என்று சொல்ல முடியாது. அவரைப் பற்றிய முழு நூல் வெளிவரவேண்டும். இந்த நூலின் முதல் பதிப்பு 1888 இல் வெளிவந்தது. பின்னர் அதனை விரிவாக எழுதி 2012 மார்ச்சு மாதத்தில் இரண்டாவது பதிப்பாக வெளியிட்டுள்ளார்.
மொத்தம் 90 அதிகாரங்களையும் 1,200 பக்கங்களையும் கொண்ட இந்த நூல் உள்ளடகத்தில் மட்டுமல்ல உருவத்திலும் கனதியான நூல். தலைவர் பிரபாகரனை இளமை முதல் நன்கு தெரிந்தவர் என்ற முறையிலும் தமிழீழத்தை மாதக் கணக்காகச் சுற்றிப் பார்த்தவர் என்ற முறையில் இந்த நூலை எழுதுவதற்கு நெடுமாறன் முழுத் தகைமை உடையவர். நான் நூலைப்பற்றிப் பேச விரும்பவில்லை. இந்த நூலை அன்பரசி, ஈழவேந்தன், இரா. குணநாதன் ஆய்வுரை நிகழ்த்த உள்ளனர்.
தலைவர் பிரபாகரன் போல் ஒரு வீரன் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக தமிழினத்தில் பிறக்கவில்லை. முத்தமிழ் அறிஞர் விசுவநாதம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாலமாக பிரபாகரன் போல் ஒரு மாவீரன் பிறக்கவில்லை என்கிறார்.
தலைவர் பிரபாகரன் உலக அரங்கில் தமிழர்களுக்கு ஒரு முகவரியைத் தேடித் தந்தவர். ஒரு அடையாளத்தைத் தேடித்தந்தவர். தமிழர்களதைத் தெரியாதவர்களும் பிரபாகரனைத் தெரிந்திருக்கிறார்கள்" என்றார்.
தமிழ்த் தாய் வாழ்த்து, கனடா நாட்டுப் பண் இரண்டையும் ஒவியா சுந்திரபோஸ் வித்தியா பிரபாகரன் இருவரும் இணைந்து பாடினார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இனிய இளைய உயிர்களை ஈகை செய்த மாவீரர்கள் நினைவாகவும் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் நினைவாகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நக்கீரன் பேசுகையில்,
சேர, சோழ, பாண்டிய இராச்சியங்கள் 13 ஆவது நூற்றாண்டோடு மறைந்து போயின. அதன் பின்னர் தமிழ்நாட்டுத் தமிழர்கள் 700 ஆண்டுகளுக்கு மேலாக துலுக்கர், தெலுங்கர், நாயக்கர்கள், மராத்தியர், ஆங்கிலேயர் ஆகிய இனத்தவரால் ஆளப்பட்டனர். யாழ்ப்பாண இரச்சியம் 1619 இல் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னர் 329 ஆண்டுகள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆங்கிலேயருக்கு நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றாலும் தமிழர்கள்
தொடர்ந்து சிங்களவர்களுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.இந்தப் பின்னணியில் தோன்றிய தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடி தமிழீழம் என்ற நிழல் அரசை உருவாக்கினார். இன்று அந்த அரசு இல்லாவிட்டாலும் அதன் கட்டுமானம் அசையாமல் இருக்கிறது.
விடுதலைப் போராட்டம் என்பது ஊர் கூடித் தேர் இழுப்பது போன்றது. தந்தை செல்வநாயகம் அந்தத் தேரை மேற்கு வீதி மட்டும் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்திவிட்டுப் போய்விட்டார். அதன் பின்னர் தலைவர் பிரபாகரன் தேரை வடக்கு வீதி மட்டும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். இப்போது இருக்கும் தலைமுறை தேரை இருப்பிடத்துக்கு இழுத்து வரவேண்டும்.
தமிழினத்தில் வரலாற்றை நாம் ஒழுங்காக, சீராக, ஆண்டு வாரியாக எழுதவில்லை என்ற பெரும் குறை இருக்கிறது. தொல்காபியர், திருவள்ளுவர் போன்றவர்களது வாழ்க்கை வரலாறு தெரியாது இருக்கிறது. இடைக்காலத்தில் வாழ்ந்த கம்பர் பிறந்த ஆண்டு, மாதம், நாள் மட்டுமல்ல அவர் பிறந்த நூற்றாண்டும் சரியாகத் தெரியவில்லை. தமிழ் அரசர்களது வரலாறு முழுமையாகக் கிடைக்கவில்லை.
யாழ்ப்பாண அரசர்களது ஆட்சி பற்றிய முழுமையான வரலாறு கிடைக்கவில்லை. எனவே பழ நெடுமாறன் எழுதிய நூல் தலைவர் பிரபாகரனது காலத்திலேயே எழுதப்பட்டது போற்றுதலுக்கு உரியது. இனிவரும் தலைமுறைகள் இந்த நூலைப் படித்தபுப் பயன் பெற வேண்டும். நீங்கள் ஒவ்வொருவதும் இந்த நூலின் இரண்டு படிகளை வாங்க வேண்டும்.
ஒன்று உங்களுக்கு மற்றது உங்கள் நண்பருக்கு" எனக் கூறினார்.
தமிழ்த் தாய் வாழ்த்து, கனடா நாட்டுப் பண் இரண்டையும் ஒவியா சந்திரபோஸ் வித்தியா பிரபாகரன் இருவரும் இணைந்து பாடினார்கள்.
நூல் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருந்தவர்களை தமிழ்ப் படைப்பாளிகள் கழக செயலாளர் முருகேசர் தியாலிங்கம் வரவேற்று உரையாற்றினார்.
நூலாசிரியர் பழ நெடுமாறன் அனுப்பி வைத்த வாழ்துச் செய்தியை ஆசிரியர் சின்னத்துரை துரைராசா படித்தார்.
நூலின் முதல் 30 அதிகாரங்கள் பற்றி ஆய்வுரை நிகழ்த்திய அன்பரசி பேசும் போது " "தொடக்க காலம் முதற்கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அறம் குறித்தும் எழுச்சி குறித்தும் அறிந்தவர் என்ற வகையிலும் வரலாற்று நிகழ்வுகள் பலவற்றில் பங்குகொண்டவர் என்ற வகையிலும் கெரில்லாப் போராட்டத் தாக்குதல் சம்பவங்களில் தொடங்கி வான்படை அமைத்துப் போராடிய வரையிலான போராட்ட வளர்ச்சியினை நன்கு
அறிந்தவர் என்ற வகையிலும் பழ. நெடுமாறன் அவர்கள் இந்நூலை எழுதுவதற்கு மிகப்பொருத்தமான தெரிவாகிறார் என்பது அய்யத்திற்கிடமற்றது.
வரலாற்றை ஆவணப்படுத்துதல் என்பது காலங்காலமாய் நடைமுறையில் இல்லாமை என்பது எம் இனத்தைப் பீடித்த சாபம் எனலாம். அந்தளவுக்கு எம்மினம், எமது வரலாற்றை, எம்மினச் சான்றோர்களது வரலாற்றை, இலக்கியங்களை, அரசியலை, நாகரீகத்தை, கண்டுபிடிப்புகளை, அறிவியலை, மருத்துவத்தை என்று எதனையும் சரிவர ஆவணப்படுத்தத் தவறிவிட்டது என்பது சோகம்.
அந்த வகையில், அந்தக் குறையை ஓரளவேனும்போக்க, தமிழகத்தில் தான் கூட இருந்து தெரிந்துகொண்டது, செவிவழி அறிந்தது, பிறர் சொல்லக் கேட்டது, படித்தது என்று அத்தனையையும் தன்னாலியன்ற வகையில் தொகுத்து இந்நூலில் பதிவாக்கியிருக்கிறார் திரு. நெடுமாறன். பிரபாகரன் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல, அவர் வீழ்ந்த எம் தமிழ் இனத்தின் மீள் எழுச்சியின் வடிவம் என்பதனை அரசியல், இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் துணைக்கொண்டு மிகச்சிறப்பாக ஆவணப்படுத்தியுமிருக்கிறார். (முழு உரை பின்னர் வரும்)
அடுத்து நூலின் பாடுபொருளாக விளங்கும் தலைவர் பிரபாகரனையும் நூலாசிரியர் நெடுமாறனையும் நன்கு தெரிந்த திரு மா.க. ஈழவேந்தன் உரையாற்றினார்.
"1987 யூலை 29 ஆம் நாள் இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்திட்ட போது நான் தமிழ்நாட்டில் இருந்தேன். அந்த உடன்படிக்கையைப் படித்துவிட்டு அதனைக் கண்டித்து இது தமிழ்மக்களை ஒழிக்க இந்தியா - இலங்கை இரண்டு நாடுகளின் கூட்டுச் சதி என அறிக்கை விட்டேன். உடனே இந்திய உளவுத்துறையினர் என் வீட்டுக்கு வந்து எப்படி ஒரு அகதியாக
இருக்கும் நான் இந்தியப் பிரதமர் செய்து கொண்ட உடன்படிக்கையை கண்டித்து அறிக்கைவிடலாம் எனக் கேட்டார்கள். அதற்கு நான் இந்த உடன்படிக்கை வட - கிழக்கு தமிழ்மக்களது தாயகம் என்பதை ஒத்துக் கொண்டுள்ளது. அது எமக்குத் தெம்பு தருகிறது. ஆனால் இந்தியா வட கிழக்கில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டோம். என்னிடம் இருந்து ஒரு நீண்ட வாக்கு மூலத்தை வாங்கிக்கொண்டு போனார்கள். போனவர்கள் போனவர்கள்தான். சிங்களக் குடியேற்றத்தைத் தடுப்பது பற்றி ஒன்றுமே நடக்கவில்லை.
அடுத்துப் பேசிய இரா குணநாதன் தான் சமாதான காலத்தில் வன்னி சென்றிருந்த போது பல படைத்தளபதிகளைச் சந்தித்து அளாவியதை நினைவு கூர்ந்தார். முக்கியமாக இராணுவத்தின் கோட்டையாக இருந்த ஆனையிறவைப் பிடித்த தளபதி பால்ராஜ் அவர்களை தானும் தனது நண்பர்
ஒருவரும் சந்தித்துப் பேசியதை நினைவு கூர்ந்தார். தாங்கள் தளபதி பால்ராஜை சந்தித்த போது அவர் ஒரு பாயில் உட்கார்ந்திருந்தார். ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக அவரோடு பேசினோம். ஆனையிறவு இராணுவ முகாமை விடுதலைப்புலிகள் கைபற்றும் திட்டத்தை தலைவர் பிரபாகரன் மிகவும் மதி நுட்பத்தோடு வரைந்திருந்தார்.
அதனை தான் உட்பட தளபதி தீபன், தளபதி பானு அவர்கள் மற்றும் படைத்தளபதிகளுக்கு விளக்கினார். "நீங்கள் குடாரப்பில் தரையிறக்கப்படுவீர்கள். குடாரப்பை ஊடறுத்து புலாப்பளையைத் தாண்டி
எழுதுமட்டுவாளை நோக்கி ஊடறுத்து தாக்குதல் நடைபெற வேண்டும்" என்றார். அப்போது நான் இராணுவத்தில் 20,000 இராணுவத்தினரைக் கொண்ட இரண்டு படை அணிகள் இருப்பதைக் குறிப்பிட்டேன். அதற்குத் தலைவர் "20,000 ஆயிரம் என்ன 40,000 இராணுவத்தினர் இருந்தால் என்ன இங்கேதான் போர் நடக்கும். அதன் பின் நீங்கள் வருவதாயிருந்தால் ஏ9 பாதை ஊடாகத்தான் வரவேண்டும்" என்றார்.
தளபதி பால்ராஜ் தலைமையில் புலிகளது படையணிகள் குடாரப்பில் தரையிறக்கம் செய்யப்பட்டன. இதுவே விடுதலை புலிகளின் கடல் வழியான தரை இறக்க தாக்குதலில் மிகப் பெரியது. இதில் ஆயிரத்து ஐந்நூறு போராளிகள் கலந்து கொண்டனர். தளபதி பால்ராஜ் தலைவரின் திட்டத்தை நிறைவேற்றி வரலாற்றுப் புகழ் பெற்ற வெற்றியை ஈட்டித் தலைவர் சொன்னது போல ஏ9 பாதை வழியே அவரும் எஞ்சிய அவரது போராளிகளும் திரும்பினார்கள்.
போரின் இறுதி நாட்களில் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் வன்னியில் மேற்கொண்ட நிவாரணப் பணியை விளக்கியபோது போர்க்களத்தில் சிக்குண்ட 300,000 மக்களைப் பட்டினியில் இருந்து காப்பாற்ற முழங்காவில் வீடுகட்டும் திட்டத்திற்கு தம்பி செந்தில் மூலம் சேகரித்து வைத்திருந்த 5 இலட்சம் டொலர்களைத் வேறு வழியின்றி அந்த மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை கொழும்பில் வாங்கி லொறிகளில் கொண்டு சென்று கொடுத்ததாகக் குறிப்பிட்டார்.
பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை திரு கந்தையா இராஜகுலசிங்கம் வெளியிட்டு வைக்க அதன் முதற் படிகளை நிமால் வினாயகமூர்த்தியும் திரு கார்த்திகேசு சிவசேகரனும் பெற்றுக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் வரிசையில் வந்து நூலை வாங்கினார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக