siruppiddy

புதன், 19 பிப்ரவரி, 2014

காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிப்பு: .

வடக்கு கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 35 சதவீதமான காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
காணி கொள்ளுதல் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதி தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றில் யோகேஸ்வரன் எம்.பி ஆற்றிய உரை,

இலங்கை அரசாங்கத்தால் காணி சார்பாக என்னென்ன திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டாலும், அது வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பையே அடிக்கடி ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக இன்று கிழக்கு மாகாணத்தில் பல காணிகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாட்டின் நிமிர்த்தம் சுவீகரிக்க ஏற்பாடாகி வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது என்ற ரீதியில் அரசு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 4550 ஹெக்டெயர் பரப்பளவுள்ள நிலத்தைச் சுவீகரிக்க உள்ளது.

செங்கலடி பிரதேசத்தில் வேப்பவட்டவான், ஈரளக்குளம், மாவடிஓடை, சின்னப்புல்லுமலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 3897 ஹெக்டெயரையும், புதூர் பகுதியில் 51 ஹெக்டெயரையும், வவுணதீவு பிரதேசத்தில் குறிஞ்சாமுனைப் பகுதியில் 600 ஹெக்டெயர் நிலத்தையும் கரும்புச் செய்கைகக்காக எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இது அப்பகுதி மக்களின் வாழ்வாதார செயற்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கும் அதே நேரத்தில் விவசாய நிலமாக இருந்து கொண்டிருக்கின்ற அம்மண்ணின் வளம் பாதிப்புக்குள்ளாகி பயனற்ற நிலைக்கு செல்வதற்கும் வழி வகுப்பதாகவே அமைகின்றது.

பொதுவாக கரும்புச் செய்கை மூலம் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதால் எதிர்காலத்தில் விவசாய மக்களுடைய வாழ்வாதார ரீதியில் பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடிய சூழல் உருவாகின்றது. அது தவிர 23000 ஹெக்டெயர் நிலத்தையும் தமது வனபரிபாலன காணியிலிருந்தும், மகாவலி அபிவிருத்திச் சபையிலிருந்தும் சுவீகரிக்கத் திட்டமிட்டிருக்கின்றது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணிகள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வேற்று இனந்தவர்களால் அத்துமீறிப் பயிர்ச் செய்கை என்ற ரீதியில் சுவீகரிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பொழுதிலும் அவற்றுக்கு இதுவரையில் சரியான தீர்வு கிடைக்கவில்லை.

வெல்லாவெளிப் பிரதேசத்தில் மாலையன்கட்டு என்னும் பகுதியில் உள்ள கிட்டத்தட்ட 1000 ஏக்கர் நிலப்பரப்புப் பிரதேசம் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பட்டிப்பளைப் பிரதேசத்தில் கச்சக்குடி சுவாமிலை கிராம அதிகாரி பிரிவிலுள்ள 150 ஏக்கர் காணி பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றத்துக்காக எடுக்கப்பட்டுள்ளது. கெவிளியாமடு, புளுகுனாவள, அடைச்சல் பகுதிகளில் 250 ஏக்கர் காணி பெரும்பான்மை இன மக்களால் பயிர்ச் செய்கைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளன.

வவுணதீவு பிரதேசத்தில் 160 ஏக்கரில் வெட்டிப்போட்டசேனையிலும் 15 ஏக்கரில் காந்தி நகரிலும் பெரும்பான்மை இன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. 5181 ஏக்கரில் வெட்டிப்போட்டசேனை, கறுவாச்சேனை, தும்பாலனஞ்சேனை, வித்திச்சேனை, பன்சேனை, கற்புத்தானை, மாவளையாறு, மணல்ஏற்றம் போன்றவற்றில் பெரும்பான்மை இன மக்கள் அத்துமீறிக் குடியேறி பயிர்ச்செய்கை மேற்கொள்கின்றார்கள்.

குறிப்பாக வவுணதீவு, செங்கலடி, பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களில் 25000 ஏக்கருக்கு மேற்பட்ட தமிழ் மக்களுடைய காணிகள் பெரும்பான்மை இன மக்களால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இராணுவ வீடமைப்புத் திட்டம் என்ற ரீதியில் வாகரை பனிச்சங்கேணியில் கிரிமிச்சை சந்திப்பகுதியில் 1000க்கு மேற்பட்ட ஏக்கர் காணியை அரசாங்கம் சுவீகரித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சின் 26.07.2013ஆம் திகதிய 1820/08 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய கிரான் பிரதேசத்தில் 6380 ஏக்கர் காணியை அரசாங்கம் சுவீகரித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சின் 26.07.2013ஆம் திகதிய 1820/28ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய உன்னிச்சைப் பகுதியில் வனபரிபாலன மேச்சல் தரையிலிருந்து 18115 ஏக்கரை அரசாங்கம் சுவீகரித்துள்ளது.

பொதுவாக வனபரிபாலனத்துக்கும் மேய்ச்சல் தரைக்கும் என ஒதுக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான காணிகளை அரசாங்கம் சுவீகரித்திருப்பதால் கால்நடைகள் அங்கு வசிக்க முடியாத சூழலும், மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழலும் உருவாகி வருகின்றது.

பருத்திச்சேனையில் 8505 ஏக்கரையும், கித்துள்வௌ பகுதியில் 498 ஏக்கரையும், உறுகாமத்தில் 7271 ஏக்கரும், குடும்பிமலை பகுதியில் 62382 ஏக்கரும் வனபரிபாலனத்தில் இருந்து சுரண்டப்படுகின்றது. இதனை சுற்றாடல் அமைச்சின் 01.08.2013ஆம் திகதிய 1821/34ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமும், 26.07.2013ஆம் திகதிய 1820/28ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமும் இக்காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

கிரான் பிரதேசத்திலும், செங்கலடி பிரதேசத்திலும் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இன மக்கள் அத்துமீறி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைச் சுவீகரித்துக் கொண்டிருப்பதனால் அங்கு கால்நடைகளை வளர்ப்பதற்கு முடியாத சூழ்நிலையில் கால்நடையாளர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களை வெளியேற்றும் முகமாக அரசாங்கம் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. வாகரைப் பிரதேசத்தில் புணாணை பகுதியில் வனபரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 46 குடும்பங்கள் இராணுவத்தினதும், பௌத்த பிக்கு ஒருவரினதும் அனுசரணையில் குடியேற்றப்பட்டிருக்கின்றன.

அண்மையில் அந்தப் பகுதிக்கு மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் ஆகியோர் வருகை தந்தார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்திருந்தார்கள். அவர்களது சொந்தக் காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

அந்த மக்களை மிளக் குடியேற்றும் முகமாக நடவடிக்கை நடந்த வேளையிலேயெ இராணுவ முகாமை அகற்றி தங்களது காணியைத் தருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் இன்றுவரை இராணுவம் அங்கிருந்து வெளியேற்றவில்லை. இராணுவம் பொது மக்களின் காணியைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.

அரசாங்கம் கொண்டு வருகின்றது இவ்வாறான ஒவ்வொரு செயற்றிட்டத்தின் காரணமாகவும், தமிழ் மக்களின் காணிகள் அங்கு பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுவாக வடக்கு கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 35 சதவீதமான காணிகளை இராணுவம் சுவீகரித்திருக்கின்றது..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com