siruppiddy

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

தமிழீழத் தேசியத் தலைவரின் பெயரால் மோதிக்கொள்ளும் !!

 தமிழீழத் தேசியத் தலைவரின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தாலும் சிங்களத் தலைமைகள் அவரது பெயரால் இப்போதும் மோதிக்கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவரை மிக மோசமானவராகக் காண்பிக்க நச்சுக் கருத்தக்களை அள்ளியள்ளி வீசிய தலைமைகள் இப்போது அவர் புகழ்பாடவும், அவரை ஏனைய சிங்களத் தலைமைகளுக்கும் உயர்வாக ஒப்பிடவும் தொடங்கியுள்ளனர்.

இதில் முன்னணியில் இருக்கின்றார் சிறீலங்கா இனப்படுகொலை இராணுவத்தின் முன்னாள் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா. விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதலில் இருந்து உயிர்தப்பியதாகப் பெருமிதப்பட்டுக்கொள்ளும் இவர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்னர் வெளியிட்டு வந்தவர். மகிந்த ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்களுடன் இணைந்து இனப்படுகொலையையும் செய்துமுடித்தவர். இப்போது அதே ஆட்சியாளர்களால் பந்தாடப்பட்டு சிறைக் கம்பிகளையும் எண்ணி முடித்துவிட்டு வெளியில் வந்திருக்கின்றார். இப்போது தனது ராஜபக்ச எதிராளிகளுடன் மோதுவதற்கு தமிழீழத் தேசியத் தலைவரிடம் இருந்த நற்பண்புகளை உதாரணமாகக் காண்பிக்க இவர் முயன்றுள்ளார்.

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை. அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. நாட்டின் இன்றைய ஆட்சியாளர் பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கும் கூடப் பெறுமதியற்றவர்” என அண்மையில் கூறியிருந்த சரத் பொன்சேகா இப்போது மேலும் பல கருத்துக்களை கூறியிருக்கின்றார்.
கொழும்பு கோட்டையில் கடந்த வாரம் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் கூறியதாவது,

எல்லாளன் இறந்த பின்னர் துட்டகைமுனு மன்னன், எல்லாளனுக்கு நினைவிடம் ஒன்றை அமைத்து கௌரவப்படுத்தினான். இந்த முன்னுதாரணத்தை அடிப்படையாக கொண்டு நானும் எதிரியை மதிக்கின்றேன். எனக்கு எதிரியுடன் எந்த பகையும் இல்லை. எனினும் நாட்டின் இன்றைய ஆட்சியாளர் அவ்வாறான நற்குணங்களை அறிந்தவர் அல்ல. நான் பிரபாகரன் பற்றி பேசும் போது ஆட்சியாளரின் மனம் துன்பப்படுகிறது.

ஆனால் 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஆட்சியாளர்களுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் விடுதலைப் புலிகளுக்கு 500 மில்லியன் ரூபாவை கொடுத்தனர். சர்வதேச சமூகத்துடன் மோதல்களை ஏற்படுத்தி நாட்டை ஆபத்தில் தள்ளியுள்ளனர். கடாஃபி போன்று தன்னை சுற்றி பெண்களை வைத்திருக்கும் தலைவர்கள் மற்றும் சுவாசிலாந்து நாட்டின் மன்னர் போன்று நிர்வாணமாக பெண்களை வைத்திருக்கும் தலைவர்களுடன் பழகும் நாட்டின் ஆட்சியாளர்கள் சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டின் இன்றைய சர்வாதிகார போக்குடனான ஆட்சியில் மக்கள் பாரிய துன்பங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டு செல்லும் அதேவேளை ராஜபக்ச குடும்பத்தினர் அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே இந்நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு சென்றதாக கூறுவது வேடிக்கைக்குரிய விடயமாகும் என்று கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவின் தமிழீழத் தேசியத் தலைவர் குறித்தான கருத்துக்கள் மகிந்த ராஜபக்சவைக் கொதிப்படைய வைக்கின்றதோ இல்லையோ, சிங்கள பௌத்த மதவாதிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக அவர்கள் வக்காலத்து வாங்கத் தொடங்கியுள்ளனர். 30 வருடகால சாபத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரபாகரனின் முடிக்கு ஒப்பானவர் அல்ல எனக் கூறுவது பாரிய குற்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளதன் மூலம் அவர் தற்பொழுது எந்த வழியில் பயணிக்க தொடங்கியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. பிரபாகரன் மோட்டார் குண்டுகளை வீசி தாக்கி, வெடி குண்டுகளை வெடிக்க செய்து, தற்கொலை குண்டுதாரியை கொழும்புக்கு அனுப்பி பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய போது பொன்சேகாவுக்கு பிரபாகரனின் உடலில் உள்ள முடியின் மதிப்பு தெரியவில்லையா என நான் கேள்வி எழுப்புகிறேன். வாய் இருக்கின்றது என்பதால் வீணாக வார்த்தைகளை உதிராது ஒழுக்கமான அரசியலில் ஈடுபடுமாறு பொன்சேகாவிடம் கேட்டுக்கொள்வதாக மேதானந்த தேரர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா, கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாகரனுடைய மயிரிழைக்கு கூட இவ்வாட்சியாளர்கள் தகுதியற்றவர்களென கூறியமைக்கு அரச ஊடகங்கள் என்னை தேசத்துரோகி என பெயர் சூட்டியுள்ளன. நான் மனச்சாட்சிக்கு உடன்படவே கூறுகிறேன். இந்நாட்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பொது மக்களை இலக்காக வைத்தே தாக்குதல்கள் மேற்கொண்டார். பிரபாகரன் இந்நாட்டை சீரழித்ததை விடவும் இவ்வரசாங்கம் மக்களை பெரும் துன்பத்திற்குள் தள்ளியுள்ளது என்று இருதரப்பையும் குற்றம்சாட்டும் வகையில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com