siruppiddy

சனி, 22 மார்ச், 2014

சி.வி, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுகிறது:

 சி.வி விக்னேஸ்வரன் எமது நிலையை அடுத்த நாடுகளுக்கு சொல்லி அழ வேண்டிய நிலைமையை அரசாங்கமே தந்துள்ளது ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வடகில் பல்வேறு கெடுபிடிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் ஏறிக் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. பழைய நாட்களை எமக்குணர்த்தும் விதத்தில் நடவடிக்கைகள் விடப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது. என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னாரில் இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு அவர் அனுப்பி வைத்த செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதில் மேலும் தெரிவித்திருந்ததாவது,

வட மாகாண தமிழ் மக்கள் அன்றும் இன்றும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இனியும் அவ்வாறான இன்னல்கள் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே இவ் உண்ணாவிரதமும் பிரார்த்தனையும் இடம்பெறுகின்றது.

அண்மையில் யாழ் குடாநாட்டுக்கு ஒரு புதிய கட்டளைத் தளபதி நியமிக்கப்பட்டிருந்தார். முன்னர் கிளிநொச்சியில் பதவியேற்றிருந்த அவர் யாழ்.குடாநாட்டில் பதவி ஏற்றதும் பல நல்ல காரியங்களைச் செய்தார். 220 இற்கும் அதிகமாக இராணுவ பணி இடங்களைவ வாபஸ் பெற்றுக்கொண்டார். எமது விவசாயிகள் பாதிக்கப்படக்கூடது என்பதால் படையினரின் உற்பத்தியான மரக்கறிகளை திருநெல்வேலி சந்தைக்கு அனுப்பாது தடுத்தார். ஏ 9 வீதியில் குடாநாட்டுக்குள் இராணுவத்தால் நடத்தப்பட்ட இயக்கச்சி தவிர்ந்த கடைகளை அவர் மூடச்செய்தார். இராணுவத்தினர் மத்தியில் கட்டுப்பாடுகளையும் கட்டுக்கோப்புகளையும் கொண்டு வந்தார்.

இவ்வாறு இருக்கும் போதுதான் ஜெனீவா வந்தது. நேற்றைக்கு முந்தைய தினம் என்னிடம் வந்து விடுதலைப் புலிகள் மீண்டும் வடக்கில் மீள் இணைகின்றார்கள்; இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவது எனது கடமை என்றார். பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது என்றார். படம் போட்டு எவ்வாறு மீள் இணைப்பு நடைபெற்றிருக்கின்றது என்று தாங்கள் நம்புகின்றார்கள் எடுத்துக் காட்டினார்.

இதை ஏன் உங்களுக்கு சொல்கின்றேன் என்றால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. பழைய நாட்களை எமக்குணர்த்தும் விதத்தில் நடவடிக்கைகள் விடப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது. ஆகவே அன்று நடந்தவற்றை என்றும் நடைமுறைப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட இருக்கின்றன. அவ்வாறு நடந்துகொண்டிருப்பதற்கு எதிராகத்தான் இந்த உண்ணாவிரதமும் பிரார்த்தனையும் இடம்பெறுகின்றன. சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28 ஆம் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனீவாவிலும் கூறப்பட்டு வருகின்றன.

நான் இராணுவத் தளபதியிடம் கேட்டேன்  ‘ஜெயக்குமாரி வீட்டினுள் இருந்து யாரோ ஒருவர் வந்த வேளையில் இராணுவத்தினர் அங்கு இருக்கவில்லையா?’ என்று. தூரத்தில் இருந்தார்கள் என்றார். இராணுவத்தினர் அங்கு இருக்கும் போதே சுட்டுவிட்டுத் தப்பிப் போய்விட்டார் என்றால் அதை ஏற்பது சற்றுக் கடினமாக இருக்கின்றது என்றேன். அவர் பதில் கூறவில்லை. எப்படியாவது வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை வரவழைக்கவே இந்த நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்பதே தமிழ் மக்கள் அனைவரின் ஏகோபித்த முடிவு.

எமது வருங்காலம் மேலும் இடர்தருவதாக அமையாது. ல்லவிதமாக அமையவேண்டும் என்பதற்காகவே நாம் இந்த அடையாள உண்ணாவிரத்தினையும் பிரார்த்தனையையும் நடத்துகின்றோம்.

ஆனால் எமதருமை மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். வன்முறைகளுக்கு எத்தருணத்திலும் இடம்கொடுக்காதீர்கள்.  அகிம்சை முறையே எமது ஆயுதம். எமது பிரார்த்தனையே எமது கேடயம். இந் நிலையில் எம்மை உறசிப்பார்க்கும் அனைவரையும் தர்மத்தின் பக்கம் சாய வைப்போம்.
நாம் எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்க எதிர்ப்பில் ஈடுபடவில்லை. ஆனால் போர்க்கால முடிவில் இடம்பெற்றவை தொடர்பில் ஆய்வு செய்ய இடமளிக்கப்படவில்லை. நடப்பவை தொடர்பாக அரசாங்கம் ஆரஅமர சிந்தித்து பார்க்கவில்லை. அத்துடன் எதேச்சதிகாரமாக இங்கு நடப்பவற்றின் அடித்தளத்தை ஆராய்வதற்கு எமக்கும் அனுசரனைகள் வழங்கப்படவில்லை. ஆகவே அடுத்த நாடுகளுக்கு சொல்லி அழ வேண்டிய நிலைமையை அரசாங்கமே எடுத்து தந்துள்ளது. இதற்காக எம்மைக் குற்றங் கூறுவதில் பயனில்லை.

மனித உரிமையாளர்கள் ருக்கி பெர்ணாண்டோ, அருட்தந்தை பீரவீன் மகேசன் ஆகியோர் அநியாயமாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இன்று பூஸா முகாமுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி கூட ஒருநாள் வழக்கேதுமின்றி விடுதலைப்பட வேண்டியவரே. ஆனால் அதுவரையில் அவர் அனுபவிக்கப்போகும் நரக வேதனைகள், அவரின் மகள் அனுபவிக்கப்போகும் அவலங்கள் ஆகியனவற்றிற்கு யார் பதில் சொல்லப் போகின்றார்கள்? ஜெனீவாவில் கதை அளக்க இவர்கள்தான் கிடைத்தார்களா? அரசாங்கமும், இராணுவமும் ‘புலி வந்துள்ளது, புலி வந்துள்ளது!’ என்று ஜெனீவாவில் கூக்குரல் இட இவர்கள்தான் பலிக்கடாக்களாகக் கிடைத்தார்களா?

இராணுவத்தை வெளியேறச் சொன்னால் இதே புலிக்கதை கூறி எமக்கு இராணுவத்தின் பாதுகாப்புத் தேவை என்கின்றார்கள் அரசாங்கமும், இராணுவமும். வேண்டுமானால் சிவில் பொலிஸ் படையை விருத்தி செய்யுங்கள். கூடிய தமிழ்ப் பேசும் பொலிஸ்காரர்களை பொலிஸ் பதவிகளில் நிறுத்துங்கள். அதை விட்டு விட்டு அப்பாவிகளை கைது செய்து அவர்களுக்கு அவலங்களை ஏற்படுத்தாதீர்கள்.

இதைவிட எமது காணிகளை அரசாங்கம் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களுக்கு தாரை வார்த்துக்கொடுப்பதை எதிர்த்தும் இவ் விரத்தை நோற்போம். எமது அவலங்கைளயும் இது வரை காலமாக எம்மை இடக்கி ஆண்டு வந்த நிலைமைகளையும் அனைத்து உள்ளுர் மக்களுக்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும் எடுத்தியம்ப இந்த அகிம்சை வழியை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம் எனவும் அவர் தனது செய்தியில் தெரிவித்திருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com