siruppiddy

செவ்வாய், 4 மார்ச், 2014

தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி

அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட உள்ள உத்தேச தீர்மானம் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நிகரான வகையிலேயே தற்போதைய தீர்மானமும் அமைந்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடாத்த ஆர்வம் காட்டவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையே சுட்டிக்காட்டியிருந்தார். எனினும், உத்தேச தீர்மான அறிக்கையில் இன்னுமொரு வருட கால அவகாசம் வழங்கும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், ஓராண்டு காலத்தில் இந்த விசாரணைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்க மேலும் ஓராண்டு காலம் காத்திருக்குமாறு பாதிக்கப்பட்ட மக்களிடம் கோருவது நியாயமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என தெரிவித்துள்ளது. குறிப்பாக காணாமல் போனவர்கள் பற்றி முறைப்பாடு செய்த குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்புப் படையினர் அச்சுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய பணிகளை

உரிய முறையில் மேற்கொள்வதற்கு சர்வதேச சுயாதீன விசாரணைகளை தவிர்ந்த வேறு வழி கிடையாது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.உத்தேச அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட அனைவரினதும் முகத்தில் விழுந்த அறையாகவே கருதப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com