siruppiddy

ஞாயிறு, 23 மார்ச், 2014

விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால் குறி தவறுமா?


விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால், கிளிநொச்சியில் பொலிஸ்காரர் தப்பியிருப்பாரா என்று எதிர்கட்சியினர் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லட்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர் ரவிகரன் சவால் விடுத்தார். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட நாடகமே நடக்கிறது. வடக்கு மாகாணசபை அமர்வு கொஞ்சம் சூடாகியது.

இருப்பினும் அமர்வு தொடர்ந்து களைகட்டவில்லை. அடிக்கடி காரசாரமான விவாதங்களை நடத்தும் சிவாஜிலிங்கம் அவைக்கு நேற்று வராததால் அவை சோபையிழந்தே, வழமை போன்று தீர்மானங்களை நிறைவேற்றியது.

வடக்கு மாகாணசபையின் ஏழாவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நேற்றுக் காலை 9.38 மணிக்கு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது.

நேற்றைய அமர்வைப் பார்வையிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா பங்கெடுத்திருந்தார்.  எதிர்கட்சித் தலைவர் கமலேந்திரன் அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

அமர்வின் ஆரம்பத்திலேயே உறுப்பினர்களின் உரைகளை ஒழுங்குபடுத்துவதற்காக, அவைத் தலைவர் சகல உறுப்பினர்களும் பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன் பின்னர் முதலில் அமைச்சர்களின் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் போது அமைச்சர் ஜங்கரநேசனால், காங்கேசன்துறையில் சீமெந்து உற்பத்தியை கைவிட வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதனை ஆரம்பிப்பதால் ஏற்படும் சூழல் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டி அதனை அவர் முன்மொழிந்தார்.

இதன் போது எழுந்த ஆளுங்கட்சி உறுப்பினர் சர்வேஸ்வரன், சூழல் மாசடைவதை நவீன முறையில் தடுக்கலாம் என்ற திருத்தத்தை உள்ளடக்கி வழிமொழிவதாகச் சொன்னார். ஆனால் முதலமைச்சரோ அமைச்சரின் பிரேரணை எந்த மாற்றமும் இன்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

இதன் பின்னர் கடந்த மாத அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட அவையின் நடைமுறைக்கோவை அங்கீகாரத்துக்காக விடப்பட்டு சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது.
இதன் பின்னர் நியதிச் சட்டத்தை அவையில் முதலமைச்சர் சமர்ப்பித்தார். நியதிச்சட்டம் அவசர தேவையாக இருப்பினும், அதனை ஆராய்ச்சி இல்லாமல் அவசரப்பட்டு முன்வைக்க முடியாது என்று காலம் தாழ்த்தி அவைக்கு வந்தற்கு விளக்கம் கொடுத்தார்.

இதன் பின்னர் எதிர்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பேசுவதற்கான வாய்ப்புக் கேட்டு, அவைத் தலைவரிடம் விண்ணப்பித்திருந்ததற்கு அமைய அவருக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அங்கஜனின் உரை அவையில் தூங்கிக் கிடந்த உறுப்பினர்களை எழுப்பி விட்டது.

அங்கஜன் ஆங்கிலத்திலேயே பேசினார். தனது உரையை உலகம் கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவதாகத் தொடங்கினார். உள்ளூரில் பேசித் தீர்க்க வேண்டிய விடயங்களை சர்வதேசத்துக் கொண்டு சென்றது தொடர்பில் கூட்டமைப்பைத் தாக்கிப் பேசியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சரும் ஆங்கிலத்தில் உரையாற்றினார். வழமைக்கு மாறாக முதலமைச்சர் கொஞ்சம் சூடாகவே பதிலளித்தார்.
அதன் பின்னர் எழுந்த சிவமோகன், அனைத்துலகமும் சேர்ந்தே எமது சுதந்திர போராட்டத்தை அழித்தது என்ற உண்மையையும் உரைத்துக் கொண்டு, கிளிநொச்சி தருமபுரத்தில் இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட செயல் என்றும் சாடினார். இந்தச் சம்பவம் நாளை நமக்கும் நடக்கலாம் என்று குண்டைத் தூக்கியும் போட்டு விட்டுப் போனார்.

இலங்கை எங்களது நாடு, எங்களுக்கும் தேசிய உணர்வு இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களிலிருந்து மாறுபட்ட கருத்தை முன்வைத்தார். அத்துடன் எங்கள் உரிமைகளை எங்களுக்குத் தந்தால் சர்வதேசம் ஏன் வரப்போகின்றது என்ற உண்மையையும் உரைத்தார்.

வெலிஓயாவில் தமிழ் மக்க ளுக்குச் சொந்தமான உறுதிக் காணிகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வே சிங்கள மக்க ளுக்கு வழங்குகின்றார். ஜனாதிபதியே காணியைக் கொள்ளையடிக்கும் நிலையிருக்கையில் நாம் எங்கு செல்வது என்று சர்வேஸ்வரன் கேள்வியைத் தொடுத்தார்.

தொடர்ந்தும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அங்கஜனுக்கு பதிலடி கொடுத்தனர். இறுதியில் கஜதீபன், இந்த விளக்கத்துடன் அங்கஜன் மனம் மாறியிருப்பார். அவரது சம்மதத்துடன் உரையை பதிவேட்டிலிருந்து நீக்கி விடுவோம் என்று சொல்ல, அவையில் சிரிப்பொலி எழுந்தது.
 இதன் பின்னர் வாய்ப்புக்காக அடிக்கடி எழுவதும் அமர்வதுமாக இருந்த எதிர்கட்சி உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், முதலமைச்சர் பேசியதையே எல்லாரும் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு நல்ல சூடு போட்டார். அத்துடன் எல்லாவாற்றுக்கும் வரிசையாக ஆதாரங்களைக் கேட்டு, அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் வாங்கிக் கட்டியும் கொண்டார்.

இதன் பின்னர் எழுந்த ரவிகரன், உரை நிகழ்த்திய எதிர்கட்சி உறுப்பினர் அங்கஜனிடம் தான் ஒன்றை மட்டும் கேட்பதாகத் தெரிவித்தார். அவர் அதற்கு மனசாட்சியின் படி உண்மையைச் சொல்ல வேண்டும் என்று பீடிகையுடன் தொடங்கினார்.

கிளிநொச்சியில் புலிகள்தானே சுட்டது என்று சொல்கிறீர்கள்? உண்மையிலேயே புலி சுட்டிருந்தால் அந்தப் பொலிஸ் உயிருடன் தப்பியிருப்பாரா? என்று ஒரு கேள்வியைப் போட்டார். அவையில் நிசப்தம் நிலவியது.

இதன் பின்னர் உரையாற்றிய அங்கஜன், தான் எல்லோரது கருத்துக்களையும் உள்வாங்கியிருப்பதாகவும், தனது தலைமைக்கு தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.. இதன் போது எழுந்த பசுபதிப்பிள்ளை ஏதோ சொல்ல முற்பட அவைத் தலைவர் அவரை இருக்குமாறு சொல்லவும், அவர் அதனையும் மீறி ஏதோ சொன்னார். இருப்பினும் அவைத் தலைவர் அவரது ஒலிவாங்கியை நிறுத்திவிட்டார்.

இந்தச் சூடான விவாதத்துடன், அமைச்சரவைக்கான ஆலோசனைக் குழுக்களின் பெயர்ப்பட்டியல் அவையில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தேநீர் இடைவேளைக்காக அமர்வு 15 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் அமர்வு மீளவும் ஆரம்பமானதும் உறுப்பினர்களின் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் போது நந்திக்கடல் பகுதி ஆழமாக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை ரவிகரனால் முன் மொழியப்பட்டது. இதனை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இதன் போது கடற்றொழில் அமைச்சர் டெனீஸ்வரன், இது எங்களுக்குள் வருகின்றது. இது தொடர்பில் 20 ஆம் திகதி முல்லைத்தீவில் கூட்டம் ஒன்று நடத்தப்படும். அதில் கடற்றொழில் தலைவர்களைக் கலந்துகொள்ளச் சொல்லுங்கள்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தெரியும் தானே என்று அமைச்சர் தொடங்க முன்னரே, அதுதான் உங்களிடம் கேட்காமல் மத்திய அமைச்சிட்ட கேட்டிருக்கின்றன் என்றார் ரவிகரன். இதன் பின்னர் குணசீலனினால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
போதனா வைத்தியசாலை இருக்கும் மாகாணத்தில் மாகாண பொது வைத்தியசாலை அமைக்க முடியாது என்ற சுகாதார அமைச்சின் சட்டம் இருக்கத்தக்கதாகவே, தான் ஒரு பிரேரணையை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலை இருக்கத்தக்கதாகவே, வவுனியா ஆதார வைத்தியசாலையை மாகாண பொது வைத்தியசாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரினார்.

ஏனைய இரு மாகாணங்களில் இவ்வாறு இருப்பதாக ஆதாரத்தை முன்வைத்த அவர், அதனால் நாமும் முயற்சிப்போம் என்று குறிப்பிட்டார். இதன் பின்னர் மிக முக்கிய விடயத்தைப் போட்டுடைத்தார்.

கட்சி உட்பூசல், அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்பாடல் இன்மை மற்றும் நடைமுறைச் சிக்கல் பலவற்றை அவையில் நேரடியாவே தெரிவித்தார். மாவட்டத்தின் விழாக்களுக்கு யாரும் போகலாம். அதைப் பற்றி நாம் கேட்கவில்லை. ஆனால் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடும் போது மாவட்டத்தின் சகல மாகாணசபை உறுப்பினர்களையும் அழைக்க வேண்டும் என்றார்.

தற்போதே மக்கள் மத்தியிலி ருந்து எங்களது குறைப்பாடுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்பதையும் இதன் பாரதூரத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதன் பின்னர் மீண்டும் ஒரு சர்ச்சை தொடங்கியது. உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியை எல்லோருக்கும் சமனாகப் பங்கிட வேண்டும் என்று. முதலமைச்சருக்கு 6 மில்லியனும், அமைச்சர்களுக்கு 4 மில்லியனும், உறுப்பினர்களுக்கு 2.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறில்லாமல் எல்லோருக்கும் ஒரே தொகை வழங்கப்பட வேண்டும் என்று அவையில் வாதிட்டார் சர்வேஸ்வரன். இருப்பினும் அதனை அவைத் தலைவர் சமாளித்து நகர்த்த முற்பட்ட போதும், சர்வேஸ்வரன் விடாப்பிடியாக இருந்ததால், முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார் என்று விடயப் பரப்பை முடிவுக்கு கொண்டு  வந்தார்.

இதன் பின்னர் வவுனியாவில் இராணுவக் குடும்பங்களுக்கு காணி கொடுப்பது தொடர்பான விவாதம் அவையில் சூடாகவே நகர்ந்து கொண்டிருந்தது. 
இதன் பின்னர் லிங்கநாதன் குறித்த விடயத்துடன் தொடர்புடைய விடயங்களை பற்றிப் பேச எழுந்தார். அவர் அவையில் ஆச்சரியமளிக்கும் ஒரு விடயத்தைச் சொன்னார். தான் இனிமேல் பிரேரணை கொண்டு வரமாட்டார் எனவும்  கொண்டு வந்த ஆறு பிரேரணைக்கும் நடவடிக்கையில்லை என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் பிரேரணைகள்  புத்தகத்தில நல்லா தான் இருக்கு என்று நக்கலாக உண்மையைச் சொல்லிவிட்டு விடயப் பரப்பினுள் நகர்ந்தார்.
அத்துடன் காணி அதிகாரம் எங்களிடம் இருக்கின்றது. துணிந்து இறங்குங்கள் என்று முதலமைச்சருக்கு தூண்டுதல் கொடுத்தார். இராணுவத்திற்கான குடியேற்றம் அங்கு குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாதென்பதற்காக அவர் அக்கறையுடன் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அஸ்மின், முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேரும் வாய்ப்பை தவறவிட்டு சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாகச் சாடினார். அத்துடன் கூட்டமைப்புடன் சேருவதற்கான சந்தர்ப்பம் கனிந்து வருவதாக அவர்கள் தெரிவித்திருப்பதானது தேர்தலுக்கான கோ­மாக மட்டும் இருக்கக் கூடாது என்று அவர் சாட்டையடி கொடுத்தார்.

அஸ்மின் வடக்கின் சமூகச் சீர்கேடுகள் தொடர்பில் தனது தெளிவான பிரேரணையை முன்வைத்தார். இதன் போது பெரும்பாலான குற்றச்சாட்டுக்களை இராணுவம் மீதே சுமத்தினார். அத்துடன் போருக்குப் பின்னரான சூழலில், வியட் நாம், ஆப்கானிஸ்தான், ஈராக் கைவிட வடக்கிலேயே சமூக சீர்கேடுகள் அதிகளவில் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார்.

இதன் போது குறுக்கிட்ட எதிர் கட்சி உறுப்பினர் ரிப்கான், இராணுவம் மீது குற்றம் சாட்டுவதை விட எங்கள் பிள்ளைகளையும் ஒழுங்காக வளர்க்க வேண்டும் என்று தார்ப்பரியத்தை உணர்த்தினார். மற்றைய எதிர்கட்சி உறுப்பினரான தவநாதன், ஏனைய நாடுகளில் போரின் பின்னரான நிலையை விட வடக்கின் நிலைமை மோசம் இல்லை என்றும், அது எந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையும் கேட்டார்.

இதற்கு கொஞ்சம் சூடாகவே பதிலளித்த அஸ்மின், அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், தவநாதன் சார்ந்திருக்கும் கட்சி (ஈ.பி. டி.பி) வடக்கில் கப்பம், கொலை, கொள்ளையில் ஈடுபட்டது என் பதைச் சுட்டிக்காட்டி விட்டு அமைதியாக அமர்ந்தார்.

இதற்கு தவநாதன் நான் என்னவோ கேட்க அவர் என்னவோ சொல்கின்றார். நான் இங்கு கட்சி பற்றிப் பேசவில்லை என்று சொன்னதும், அஸ்மின் தான் தவறான நோக்கோடு சொல்லவில்லை என்று தெரிவித்து மன்னிப்புக் கோரி தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தினார்.

இறுதியாக பசுபதிப்பிள்ளையின் பிரேரணைகள்  எடுத்துக் கொள்ளப்பட்டன. நேரமும் சென்று  அவையினர்  பசியிலிருந்ததால் என்னவோ, நான்கு பிரேரணைகளையும் வாசித்து  முடித்த பின்னர் தான் வழி மொழிந்தனர்.

இதில் கிளிநொச்சி தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தை மாகாணசபை பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார். இதன் போது இது தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கணினிப் பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி என்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு வழங்கியதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன் அமைச்சர் குருகுலராஜா, உறுப்பினர் அரியரட்ணம் ஆகியோர் அதன் தலைவர்களாக இருந்தனர் என்று கோர்த்தும் விட்டார். ஆனால் தற்போது அங்கு எதுவும் நடைபெறுவதில்லை என்றும், மாகாணசபை பொறுப்பெடுத்து, புலிகள் இருந்த காலத்தில் கொடுத்த பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
அவையிலிருந்தவர்கள் ஐயா, எந்தப் பயிற்சியை என்று சொல்லுங்கோ என்று நக்கலாகக் கேள்வி எழுப்பினர்.

இதன் பின்னர் கொக்கிளாய் கடல்நீரேரியில் கரைவலைப்பாடு தொடர்பில் ரவிகரனால் அவசர பிரேரணை முன்வைக்கப்பட்டது. அவைத் தலைவருடன் இழுபறிப்பட்டே அந்தப் பிரேரணை அவர் சமர்ப்பித்தார்.

இதன் பின்னர் அடுத்த அமர்வுக்கான கூட்டத் திகதியை அறிவிப்பதில் இழுபறிப்பட்டாலும் கடைசியில் ஏப்ரல் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து அவை அமர்வு முடிவுக்கு வந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com